காஷ்மீரின் ஆனந்தநாக்கில் தற்காலிக விமானப்படை தளம் அமைக்கும் பணி

காஷ்மீரின் ஆனந்தநாக் பகுதியில் தற்காலிக விமானப்படை தளம் அமைப்பதற்கான பணியை மத்திய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்திய - சீனா எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் தங்களின் படைகளை குவித்து வருகின்றனர். இந்த பிரச்னை குறித்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நாளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

இதற்கிடையில் என்.எச். ஏ.ஐ., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டம் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் 3.5 கி.மீ., சுற்றளவிற்கு தற்காலிக விமானப்படை தளத்தை அமைக்கும் பணியை துவக்கியுள்ளது.

அவசர காலங்களில் இந்த விமானப்படை தளத்திலிருந்து வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக பல்வேறு ரக போர் விமானங்கள், தரையிறக்கவும், இயக்கவும், தேவையான எரிபொருளை நிரப்பிக்கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.