சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் 45 ஆக உயர்வு

சென்னையில் கொரோனா வைரஸ் அதிகளவில் உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வெளியூர்களில் இருந்து அதிகபேர் சென்னைக்கு வருகிறார்கள். அவர்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் வரை கட்டுப்பாட்டு பகுதிகள் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது அது அதிகரித்து வருகிறது.

கட்டுப்பாட்டு பகுதிகள் 12ஆக இருந்த நிலையில் இப்போது 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அண்ணாநகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 12 கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா 10 தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கத்தில் 8 பகுதிகளும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மண்டலங்களில் மட்டுமே அதிக பாதிப்பு இருப்பதால் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் 3 பகுதிகளும், பெருங்குடி, ஆலந்தூரில் தலா ஒரு கட்டுப்பாட்டு பகுதியும் அமைந்துள்ளன.

மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நோய் தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதனை கட்டுப்படுத்த அதிக பாதிப்பு உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தெருக்கள் சீல் வைக்கப்படுகின்றன.

தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், களப் பணியாளர்கள் தொடர்ந்து இந்த பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.