போலீசாருக்கும் முழு முகத்தை மறைக்கும் முகக்கவசம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு... தமிழகத்தில் போலீசார், கொரோனாவினால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் அவர்களுக்கு முழு முகத்தை மறைக்கும் கவசம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பில் முன்கள பணியாற்றுபவர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அளிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில், மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 54434 பேருக்கு முகத்தை மறைக்கும் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில், அனைத்து போலீசாருக்கும் முழு முகத்தை மறைக்கும் முழு மாஸ்க் (பேஷ் ஷீல்ட்), கையுறை வழங்க வேண்டும். போலீசார் முழு முகக்கவசம் அணிவதை மாவட்ட எஸ்.பி.,க்கள் உறுதிப்படுத்த வேண்டும். போலீசாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து, நகராட்சி, பஞ்சாயத்துகளில் துப்புரவு பணியாளர்கள் மாஸ்க், கையுறை அணிந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

ஆயிரம் போலீசாருக்கு கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் 1,005 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில், 410 போலீசார் குணமடைந்து பணிக்கு திரும்பினர்.