இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.

இந்திய அளவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது. தற்போது, இதுவரை இல்லாத அளவிற்கு இன்று முதன்முறையாக கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 11,18,043 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 681 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 7,00,086 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 3,90,459 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 27,497 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,10,455 பேரும், தமிழகத்தில் 1,70,693 பேரும், டெல்லியில் 1,22,793 பேரும், கர்நாடகாவில் 63,772 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.