தமிழகத்தில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் ஏற்கனவே 13 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகிய நிலையில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தவிர ஒருசில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நேற்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஓசூர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ரு வருகிறார்.

இந்த நிலையில் அடுத்ததாக தற்போது வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.