தொடர் நடவடிக்கைகள் காரணமாக ஈரோட்டில் கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது... ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது பேதமின்றி வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, 9 ஆயிரத்தை கடந்தது. நோய் பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள்யும், காய்ச்சல் இருமல் கண்டறியும் முகாம்களும் நடத்தியது.

மேலும், மாவட்டம் முழுவதும் பரிசோதனை நிலையங்கள், ஸ்கிரீனிங் மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை என நடவடிக்கை எடுத்தது. இதனால், மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிய குறைய துவங்கியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோட்டில் மேலும் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9290 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பிலிருந்து 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,246 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் ஈரோடு மாநகராட்சி பகுதியிலும், தினசரி பாதிப்பு குறைய துவங்கியுள்ளது. முன்பு நாள்தோறும் 70 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பாதிப்பு 15 முதல் 20 ஆக குறைந்துள்ளது. மேலும், மாநகராட்சி பகுதியில் அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்ட 300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தந்த பகுதியை சேர்ந்த செவிலியர்கள் மூலம், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.