திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா; காசர்கோட்டில் பரபரப்பு

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா... கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணமகன், மணமகள் உட்பட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அப்பகுதி அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செங்கலாவில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மணமகன் மற்றும் மணமகளுக்கும் கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்ததாக மணமகளின் தந்தை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமண விழாவில் கலந்து கொண்ட மீதமுள்ள நபர்கள் வீட்டில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் தோன்றினால் அருகிலுள்ள சுகாதார மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.