இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை கடந்தது; இதுவரை 32,771 பேர் பலி

இந்தியாவில் மொத்தம் 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32,771 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. நாட்டில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதோடு கூட பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் பலி நிலவரம் தொடர்பாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 708 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவது இதுவரை 9 லட்சத்து 17 ஆயிரத்து 568 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 3,75,799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,13,238 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13,656 பேர் மரணம் அடைந்துள்ளனர். இரண்டாவதாக தமிழகத்தில் 2,13,723 பேருக்கும், மூன்றாவதாக டெல்லியில் 1,30,606 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.