உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து சேவை துறைகளும், போக்குவரத்தும் முடங்கின. 5 மாதங்கள் கடந்த நிலையிலும் கூட பொதுமக்களுக்கு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. உலக வரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியா, 2-வது இடத்தில் உள்ள பிரேசிலை பின்னுக்கு தள்ளும் உத்வேகத்தில் உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாநிலத்தின் பண்டா நகரில் உள்ள புட்டா குடான் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 32 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கான்பூரை சேர்ந்த நீலான்சு சுக்லா என்ற பத்திரிகையாளர் கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்புக்கு பத்திரிகையாளர்கள் இறந்து வருவது குறிப்பிடத்தக்கது.