விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,484 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேல் மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 15 ஆயிரத்து 286 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,484 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. வீடுகளில் 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 16,484 ஆக உயர்ந்துள்ளது.

முதல்-அமைச்சர் நேற்று விருதுநகர் ஆய்வு கூட்டத்திற்கு வந்த போது மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக தெரிவித்தார். ஆனாலும் மருத்துவ பரிசோதனைகளை குறைந்து விட கூடாது என வலியுறுத்தினார். ஆனால் இந்த மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனைகள் அதிகரிக்கப்படவில்லை.

ஒரு பரிசோதனை மையம் மட்டுமே இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மாவட்ட சுகாதாரதுறை மெத்தன போக்கை கடைபிடித்தால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அரசு விதிமுறைகளின் படி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.