மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; அமைச்சர் விஜயபாஸ்கர்

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தமிழகத்தில் தற்போது இறப்பு விகிதங்கள் பெருமளவு குறைந்து விட்டது. கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் ஏராளமான படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் உள்ளனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து களப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி லேசானதாக இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லுமாறு மக்களை ஊக்குவித்தோம். இதன் பலனாக ஆரம்பத்திலேயே கொரோனா பாதிப்பு அடைந்தவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடிகிறது.

ஒவ்வொருவருக்கும் ஊட்டச்சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுவதால் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணமாகும்.

தற்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் வருவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனாலும் ஒவ்வொரு இடங்களிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.