மதுரையில் அதிகரிக்கும் கொரோனா பலி...இதுவரை 193 பேர் உயிரிழப்பு

மதுரையில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்தநிலையில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று அதை விட அதிகமாக ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 211 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதுபோல், போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 16 பேர் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், 7 கர்ப்பிணிகளுக்கும் என மொத்தம் 326 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல் சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.

மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 448 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 483 பேர் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்றுடன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 302 ஆக உள்ளது. இதுபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 2661 ஆக உயர்ந்திருக்கிறது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் நேற்றும் 10 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.