இதுவரை இல்லாத அளவில் 24 மணிநேரத்தில் இந்தியாவில் 15413 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் காரணமாக 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், மேலும் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மற்றும் கொரோனா பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனா பாதிப்பில் உள்ளது. அடுத்து டெல்லி, குஜராத் உள்ளன. இருப்பினும் கொரோனா பலி எண்ணிக்கையில் தமிழகத்தை விட டெல்லி, குஜராத் அதிகளவில் உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் காரணமாக 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,10,461 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காரணமாக 306 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் மொத்த பலி எண்ணிக்கை 13,254 ஆக உயர்ந்துள்ளது.

1,69,451 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,27,756 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.