கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-மத்திய அரசு

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. சி.ஜி.எச்.எஸ். என்ற பெயரில் சுகாதார திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஐகோர்ட்டுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் என பலர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் பல ஆஸ்பத்திரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆஸ்பத்திரிகள் மத்திய அரசு சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார்கள் வந்துள்ளன.இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில், கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரிகள் என்று மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள சி.ஜி.எச்.எஸ். திட்ட ஆஸ்பத்திரிகள் அனைத்தும், மத்திய அரசு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு திட்ட விதிமுறைகளுக்கு இணங்க சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், கொரோனா ஆஸ்பத்திரிகள் என்று அறிவிக்கப்படாத சி.ஜி.எச்.எஸ். திட்ட ஆஸ்பத்திரிகள் சிகிச்சை வசதிகளை அளிக்கவோ, பயனாளிகளை சேர்க்கவோ மறுக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவற்றுக்கு விதிமுறைகளின்படி கட்டணம் வசூலிக்கலாம். எல்லா சிகிச்சைக்கும் இது பொருந்தும்.இந்த உத்தரவை மீறும் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சி.ஜி.எச்.எஸ். திட்டத்தின் கீழ் 36 லட்சம் பேர் பயனடைகின்றனர்.