சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாட்டு

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கடந்த 2 வாரங்களாகவே கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. அதிலும், சென்னை, செங்கல்பட்டு போன்ற சில மாவட்டங்களில் மட்டும் தினமும் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி கொண்டிருக்கிறது.

கொரோனா பரவல் அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஜூன் 13ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் தான் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருவதால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், முக கவசம் அணிந்து தான் மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் எனவும், கல்வி நிர்வாகம் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும், பள்ளி கல்லூரி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அந்தந்த கல்வி நிறுவனங்கள் பொறுப்புடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொண்டைவலி, காய்ச்சல், இருமல் இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறிகள் இருந்தால் கூட கண்டிப்பாக மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள

இந்த கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.