பிரிட்டனில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 40,261 ஆக அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:- பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 357 பேர் கொரோனா தொற்றால் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 40,261 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிரிட்டனில் கொரோனா தொற்றால் இதுவரை 2 லட்சத்து 83 ஆயிரத்து 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8-ம் தேதி முதல் அயர்லாந்து தவிர்த்து, பிற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடையத் தொடங்கியதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தங்கள் எல்லைகளை மூடின. விமானச் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது சில நாடுகளில் கொரோனா தீவிரம் குறைந்துள்ள நிலையில், அந்நாடுகள் பொருளாதாரச் சூழலைக் கணக்கில் கொண்டு ஊரடங்கைத் தளர்த்தி அதன் எல்லைகளைப் படிப்படியாகத் திறந்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 68 லட்சத்து 50 ஆயிரத்து 612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 98 ஆயிரத்து 244 பேர் பலியாகி உள்ளனர். 33 லட்சத்து 51 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர்.