இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு 28,701 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஊரடங்கு விதிகள் தளர்வு, பரிசோதனைகள் அதிகரிப்பு இருந்தாலும் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்தியாவில் இதுவரை 8,78,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு 28,701 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் 500 பேர் பலியாகி உள்ளனர். அதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,53,471 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர். 3,01,609 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 254427 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 138470 பேருக்கும், டெல்லியில் 112494 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.