சென்னை திநகர் ஜவுளி நிறுவனத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிரடி

சென்னையில் ஜவுளி கடைக்கு சீல்... சமூக இடைவெளியை மீறி பொதுமக்களை அதிக அளவு கடைக்குள் அனுமதித்த தி.நகர் குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவது, கை கழுவுவது தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் அதையும் மீறி சென்னையில் உள்ள பல்வேறு கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் சென்னையின் மிகப் பெரிய வணிக பகுதியான தி.நகரில் உள்ள பெரிய கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றப்படுவதில்லை என்று மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் இந்த கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிக கூட்டத்தை கடைக்குள் அனுமதித்து வியாபாரம் செய்தது குறித்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 10வது மண்டல அதிகாரிகள் தி.நகரில் உள்ள பெரிய கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அதில் தி.நகர் குமரன் சில்க்ஸ் கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்களை அனுமதித்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கடைக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.