கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 14-ந்தேதி 20 ஆயிரத்தை தாண்டி இருந்தது.அதன்பிறகு தொடர்ந்து 4 நாட்கள் 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று முன்தினம் 16,935 ஆகவும், நேற்று 15,528 ஆகவும் குறைந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 20,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 3 ஆயிரத்து 619 ஆக உயர்நதது. கொரோனா பாதிப்பால் மேலும் 40 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,25,825 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 18,517 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 32 ஆயிரத்து 140 ஆக உயர்ந்தது.தற்போது 1,45,654 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது நேற்றை விட 2,000 அதிகம் ஆகும். நாடு முழுவதும் நேற்று 26,04,797 டோஸ்களும், இதுவரை 200 கோடியே 61 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே நேற்று 4,98,034 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.