உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதால் உயிரிழப்பு

பெங்களூரு எஸ்.பி. ரோடு அருகே நகரத்பேட்டை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஆஸ்டின் டவுன் பகுதிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவதிப்பட்டார். இதனால் பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு படுக்கை காலியாக இல்லை என மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினர். அதன்பின், வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்களும் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறிவிட்டனர். கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் தொடர்ந்து 50 தனியார் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.

அதன்பின், கடந்த 28-ந் தேதி அன்று காலையில் அவருடைய உறவினர் ராஜாஜிநகரில் உள்ள ஒரு ரத்த பரிசோதனை ஆய்வகத்துக்கு அவரை அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்தார். மேலும் அங்கு அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டரும் பொருத்தப்பட்டது. பரிசோதனை அறிக்கையை பெற்றவுடன், அவரது உறவினர் அந்த நபரை மீண்டும் பவுரிங் மற்றும் லேடி கர்ஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ரத்த பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்தபின் அந்த நபரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மருத்துவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் ஆஸ்பத்திரி வாசலிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.