தோல் நோயால் பாதித்து இறக்கும் மாடுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் கோரி வலியுறுத்தல்

பெங்களூர்: தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் மாடுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவேன் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:- கர்நாடகாவின் பல பகுதிகளில் மாடுகள் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் இந்நோய் தாக்கிய மாடுகள் இறப்பதாக செய்திகள் வருகின்றன.


இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறக்கும் மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்ய கூட டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த தோல் நோயால் இறக்கும் பசுக்களுக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.


இந்த நிவாரணம் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே இறக்கும் மாடுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவேன்.

இந்நோய் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு விரைந்து செயல்படாமல் நேரத்தை வீணடிக்கிறது என்று குமாரசாமி தெரிவித்தார்.