குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சி

குஜராத்: குஜராத்தில் இரண்டு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள விவசாய வயலில் இரண்டு வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். ஜாம்நகர் நகரிலிருந்து 40 கிமீ தொலைவில் தமச்சான் கிராமத்தில் உள்ள பண்ணையில் கூலி வேலை செய்யும் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி விவசாய வயலில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென அங்கிருந்த 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக ஜாம்நகர் தாலுகா வளர்ச்சி அதிகாரி என்.ஏ.சர்வையா கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய சர்வையா, நாங்கள் காலை 11 மணியளவில் ஜாம்நகரில் இருந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்து மீட்புப் பணியைத் தொடங்கினோம். அந்த சிறுமி சுமார் 20 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று சர்வையா தெரிவித்தார்.