ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் மரணம் அடைந்தது குறித்து மாறுபட்ட தகவல்

கொரோனாவை கட்டுப்படுத்த பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. பிரிட்டன் அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை பிரிட்டன், இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த தன்னார்வலரின் வயது 28 என தகவல் வெளியாகி உள்ளது. பரிசோதனையில் பங்கேற்ற நபர் உயிரிழந்த போதிலும், பரிசோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.

தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தற்போது, தன்னார்வலர் மரணம் தொடர்பாக பிரேசில் நாளிதழில் மாறுபட்ட தகவலும் வெளியாகி உள்ளது. இறந்துபோன தன்னார்வலர், தடுப்பூசி பெறாத கட்டுப்பாட்டு குழுவில் இருந்ததாகவும், அவர் கொரோனா பாதிப்பினால் இறந்ததாகவும் அந்த நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த தன்னார்வலர் 28 வயது நிரம்பிய மருத்துவர் என்றும், ரியோ டி ஜெனிரோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தவர் என்றும் ஜி1 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து பலர் அச்சமடைந்துள்ளனர்.