படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை; மதுரை மாணவி தற்கொலை குறித்து இயக்குனர் சேரன்

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் நீட் தேர்வு பயம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்ட தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், 'எல்லோரும் என்கிட்ட நிறைய எதிர்பார்த்தாங்க. ஆனால் எனக்குத்தான் பயமா இருக்கு. இது என்னுடைய முடிவு. இதற்கு யாரும் காரணமல்ல. ஐ லவ் யு அம்மா, ஐ மிஸ் யூ அப்பா' என கடிதம் எழுதி வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது என்று என்றும் தற்கொலை எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வல்ல என்றும் அவர்கள் தங்களுடைய டுவிட்டர் பகுதியில் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்.