காவிரி நீரை பெற்றுத்தருவதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தொடர்ந்து உறுதியாக எடுக்கும் ..முதலமைச்சர்

சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து இத்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.


இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் உணவு தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்.

அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம். ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். எனவே இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தொடர்ந்து உறுதியாக எடுக்கும் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.