அடுத்த நாடகத்தை தொடங்குகிறது திமுக; பாஜ தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: அடுத்த நாடகம்... தி.மு.க., அரசு வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, இந்தியா, ஹிந்தியா என்று அடுத்த நாடகத்தை துவக்குகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் மிகுந்த நலிந்த நிலையில் இருந்தும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாததால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறி போயின.

இதை பிரதமர் கவனத்திற்கு எடுத்து சென்று, அந்த சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யும் நடவடிக்கைகள், தமிழக பா.ஜ.,வால் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அமைச்சரவை, மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. திராவிட 'ஸ்டிக்கர்'மத்திய அரசு செய்த சாதனைக்கு வழக்கம்போல், தி.மு.க., திராவிட 'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலை செய்வது வேடிக்கையாக இருக்கிறது. சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வால் மக்கள் அவதிப்படும்போது, தி.மு.க., அரசு கொஞ்சமும் கவலைப்படாமல், அடுத்தவர் சாதனைக்கு தங்கள் 'அட்ரசை' ஒட்டுவது தான் திராவிட மாடலா?

தங்களால் எதுவுமே உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால், அடுத்தவர் உழைப்பில் ஒட்டி பிழைக்க, தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுகிறதா?மொழியில் அரசியல், கல்வியில் அரசியல், ஜாதியில் அரசியல், மதத்தில் அரசியல், பிரிவினைவாத அரசியல் என, மக்களை தொடர் பதற்றத்தில் வைத்திருக்கிறது தி.மு.க., அரசு.

வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தமிழக கனிமங்களை எல்லாம் கமிஷனுக்காக கொள்ளை போக அனுமதித்து விட்டு, 'இந்தியா, ஹிந்தியா' என்று அடுத்த நாடகத்தை துவங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.