விக்னேஸ்வரன் கருத்தை இனவாதமாக கருதாதீர்கள்; மனோ கணேசன் வலியுறுத்தல்

இனவாதமாகக் கருத வேண்டாம்... சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றே நான் கூறவேண்டும். சபாநாயகரே அதற்கு பதிலளித்து விட்டார். எனவே, இனியும் இதனை விவாதப் பொருளாக கருதக்கூடாது.

ஏனெனில், இதற்கு முன்னரும் நாடாளுமன்றில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி என்பது இலங்கையின் மூத்த மொழியா - இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், தமிழ் மொழி உலகிலேயே பழைய மொழியாகும். இதற்கான சான்றுகளும் உள்ளன.

எனவே, இதனை பெரிதுப்படுத்தக்கூடாது. இதனை இனவாதமாகக் கருதக்கூடாது. இனவாதமாக கருத்துக்களை வெளியிட்டு, மக்களை குழப்பியடிக்கவும் முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.