மிசோரம், நாகாலாந்து பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்

வட இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மிசோரம், நாகாலாந்து போன்ற பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இன்று அதிகாலையிலும் மிசோரம் மாநிலத்தின் சம்பாய் அருகே அதிகாலை 1.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பாயில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 21 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகாக பதிவாகியிருந்தது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதேபோல், நாகாலாந்திலும் இன்று அதிகாலை 3.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.8 ரிக்டர் அளவில் பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஏற்கனவே, மிசோரம் மாநிலத்தில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.