எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு ... தீர்ப்பு வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அல்லது 1-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியாகும்?

சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்தனர். கடந்த மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

எனவே இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார். மேலும் ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறினார்.

இதை தொடர்ந்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு ஒன்றை செய்தார். வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சியில் பொதுக்குழுவே முக்கியமானது. மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தனி நீதிபதியின் உத்தரவால் கட்சியே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என வாதிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், மிகப்பெரிய இயக்கத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாது.

மேலும் இது கட்சி விதிகளுக்கு புறம்பானது என்றனர். வழக்கின் இறுதி விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அல்லது 1-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என கூறப்படுகிறது.