மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி

சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகள் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் எப்படி பின்பற்றப்படுகிறது என எப்படி கண்காணிக்கப்போகிறார்கள்? என்பது குறித்தும் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள் என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மேலும் மலைவாழ் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பெறலாம் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கற்கும்போது ஆபாச இணையதளங்கள் நுழைய முடியாதபடி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் வகுப்பு விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.