ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதி

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் தாமு அன்பரசன் தொடக்கி வைத்தார். இந்த ஆட்டோ வசதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காகவும் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் வருவதற்காகவும் பல்வேறு இணைப்பு வாகன வசதிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் தற்போது எம்.ஆட்டோ பிரைடு என்ற மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமு அன்பரசன் தொடங்கி வைத்தார். எம்.ஆட்டோ பிரைடு முழுமையாக மின்சார சக்தியில் இயங்கும்.

இதனை செயலின் மூலம் பயன்படுத்தி மின்னணு முறையில் பணத்தை செலுத்தலாம். மேலும் நேரடியாகவும் பயணிகள் பயன்படுத்தலாம். கிலோமீட்டருக்கு 12 என்ற கட்டணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கின்றது.