பாதை ஆக்கிரமிப்பு இறந்தவர் உடலை வயல் வழியே எடுத்து சென்ற உறவினர்கள்

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூர் அருகே உள்ள கத்திக்காரன்பட்டியை சேர்ந்தவர் பெரியக்காள் (65). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மணப்பாறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் கத்திகாரன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து தனிநபர் அதில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகாலம் பயன்படுத்தி வந்த சாலையை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் அதை அகற்றி தருமாறும் அந்தப் பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் வையம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வந்த நிலையில் பாதையை சரிசெய்து கொடுக்காத நிலையே இருந்துள்ளது. இதற்கிடையே ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கும் உடக்கம் செய்யச் சென்றவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்தால் பெரியக்காள் உறவினர்கள் உடலை சாலையில் வைத்து எரிப்பதற்கு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் எந்த விட உடன்பாடும் எட்டப்படாததால் இறந்தவரின் உறவினர்கள் திடீரென முள்வேலியை அகற்றி விட்டு உடலை எரியூட்ட கட்டைகளை எடுத்துக் கொண்டு சென்றனர்.


அப்போது பெண்களும் கட்டைகளை சுமந்து சுடுகாட்டிற்கே சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுடுகாட்டிற்கு வயல் வழியாக தூக்கிச் சென்று எரியூட்டி இறுதிச்சடங்குகள் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.