சென்னையில் இன்று சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு

சென்னை: சென்னையில் இன்று கணினி மூலம் சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு நடக்கிறது. 12 பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் 593 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியிடங்களில் 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வுக்கு 593 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 327 ஆண்களும் 266 பெண்களும் அடங்குவர். இந்த பணிகளுக்கான கணினி மயமாக்கப்பட்ட தேர்வு இன்று 13ம் தேதி நடைபெற உள்ளது.

முதல் தாள் தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். முதல் தாள் தேர்வில், சமுதாய மருத்துவம் (பட்டப்படிப்பு கிரேடு) தேர்வு நடத்தப்படுகிறது. 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

2ம் தாள் தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பகுதி “A” இல் கட்டாய தமிழ் மொழி திறன் தேர்வு (10 ஆம் வகுப்பு) உள்ளது மற்றும் “B” இல் பொது அறிவு (பட்டப்படிப்பு நிலை) தேர்வு உள்ளது.

100 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்காணல் மற்றும் தாள்களுக்கு 60 மதிப்பெண்கள் என மொத்தம் 510 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த கணினி வழித் தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடத்தப்படுகிறது. 593 பேர் எழுதுகிறார்கள்.