ஹாங்காங்கில் கொரோனா காரணமாக தற்காலிக மருத்துவமனையாக மாறிய கண்காட்சி மையம்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. இதனால், அந்நாட்டின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரமான ஹாங்காங் சீனாவுடனான போக்குவரத்து தொடர்பை உடனடியாக துண்டிக்கப்பட்டதால், ஹாங்காங்கில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் முதல் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. கடந்த மாதம் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இது கொரோனா தொடங்கியது முதல் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 60 சதவிகிதம் ஆகும்.

தற்போது ஹாங்காங்கில் 3 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அங்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 22 உயிரிழப்புகள் கடந்த மாதம் மட்டும் நிகழ்ந்துள்ளன. தற்போது, ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் இடவசதியை உறுதி செய்ய தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கண்காட்சி மையத்தில் இந்த தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இது 500 படுக்கைகளை கொண்டது. இங்கு கொரோனா பாதிப்பு குறைவான அளவில் உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.