குமரி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீரின்றி தவிக்கின்றனர்

சென்னை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்... குமரி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே புத்தன் அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து முடிக்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரின்றி பயிர்கள் கருகி வருவதால் உடனடியாக மாவட்டம் முழுவதும் அனைத்து கால்வாய்களையும், குளங்களையும் தூர் வாரி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; தி.மு.க. ஆட்சியில், மாவட்டத்தில் எவ்விதமான தூர்வாரும் பணிகளும் நடைபெறாததால், கடந்த ஆண்டு 14 ஆயிரத்து 250 ஏக்கரில் மட்டுமே வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஆண்டு அப்பரப்பு மேலும் குறைந்து சுமார் 10 ஆயிரத்து 500 ஏக்கரில் மட்டும் பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நாகர்கோவில் மாநகருக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.