தோமரின் கடிதத்தை படித்து பார்த்த விவசாயிகள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் - பிரதமர் மோடி

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 23-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு 8 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில் அவர், மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு வகையிலும் பலனளிப்பதாகும். ஆனால் இதைப்பற்றி விவசாயிகள் மத்தியில் தவறான வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் சிலர் பரப்பி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற தவறான தகவல்கள் விவசாயிகளின் மத்தியில் பரவியிருப்பதால் அந்த எண்ணங்களை அகற்றுவதற்காக இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். எனக்கும் விவசாயத் தில் நல்ல அனுபவம் உண்டு. விவசாயிகளின் கஷ்டங்கள், வேதனைகளை நான் புரிந்து கொண்டவன். விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மத்திய அரசு புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தோமர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இதில் பிடிவாதம் காட்டக் கூடாது. ஏற்கனவே 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. எனவே அதை ஏற்றுக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கடிதத்தில் அவர் கூறி இருந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இந்த கடிதத்தை விவசாய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எழுதியுள்ளார். அமைதியான பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண அவர் முயற்சித்துள்ளார். அனைத்து விவசாயிகளும் இந்த கடிதத்தை படித்துப்பார்த்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.