கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் உலகின் பல்வேறு நாடுகளில் தயாராகி வருகின்றன. இந்தியாவிலும் பல தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளன. கொரோனா தடுப்பூசிகளை வினியோகிக்கும் செயல் திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. தடுப்பூசி போடுவதில் சுகாதார பணியாளர்கள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில் தடுப்பூசிகளை சுமுகமாக வினியோகிப்பதற்கு ஒன்றிய அளவில் சிறப்பு குழுக்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில்,கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்கான திட்டமிடல் மற்றும் ஆயத்தப்பணிகளை மேலும் பரவலாக்கும் நோக்கத்துடன் கொரோனா தடுப்பூசி அறிமுகத்துக்கான ஒன்றிய சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இந்த குழுக்களில் அரசு துறைகளின் பிரதிநிதிகள், வளர்ச்சி பங்காளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், உள்ளூர்செல்வாக்கு பெற்ற மனிதர்கள் மற்றும் மத தலைவர்கள் இடம்பெற வேண்டும். தடுப்பூசிக்கான பயனாளர்களின் தரவுகளை நிர்வகித்து மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்குதல், திட்டமிடல், தடுப்பூசி சேமித்தலுக்கான திட்டமிடல், ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பு ஏற்றல் போன்ற பணிகளை இந்த குழுவினர் மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தடுப்பூசி வினியோகத்தின் மேற்பார்வை, உள்ளூர் சூழலை அடிப்படையாக கொண்டு தகவல் தொடர்பு அமைத்தல் போன்றவற்றை இந்த குழு உறுதி செய்வதுடன், தடுப்பூசி தொடர்பான வதந்திகள் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத தலைவர்கள் உள்பட உள்ளூர் செல்வாக்குள்ள நபர்களின் பங்களிப்பை அதிகரித்து தடுப்பூசி குறித்த தவறான தகவல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேவையான இடங்களுக்கு தடுப்பூசி போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.