நிலநடுக்கத்தை உணர்ந்து தெருவில் தஞ்சம் அடைந்ததேன்... குஷ்பு டுவிட்

புதுடில்லி: தெருவில் தஞ்சம் அடைந்ததாக தகவல்... டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்து தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக நிலநடுக்கம் பதிவானது, இந்த நிலநடுக்கத்தால் வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்கிழக்கில் 156 கி.மீ தொலைவில் 184 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், சீனா, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கம் டெல்லி, காஷ்மீர், உ.பி., ஸ்ரீநகர் உள்ளிட்ட வட இந்தியாவில் பல மாநிலங்களில் உணரப்பட்டது. டெல்லியில் வீட்டில் இருந்த கட்டில், சோபா உள்ளிட்ட பொருட்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையில் திரண்டனர்.

இந்நிலையில் தற்போது டெல்லியில் இருக்கும் நடிகை குஷ்பு இது குறித்து ட்வீட் செய்துள்ளார். டெல்லி முழுவதும் 4 நிமிடங்களுக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் மின்விசிறி, மின்விளக்குகள் அதிர்ந்ததால் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சம் அடைந்ததாக கூறினார்.