மின்சாரம் தாக்கி இறந்த பெண் மயிலுக்கு தேசியக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி

டிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். இதை பார்த்து மக்கள் கண்கள் கலங்கிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் அதிகளவில் மயில்கள் சுற்றி வருகின்றன. உணவு மற்றும் குடிநீருக்காக இவை குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் மயில்கள் வாகனங்களில் அடிப்பட்டு, மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கின்றன.

இந்நிலையில் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் மூன்று வயதுடைய பெண் மயில் ஒன்று குடியிருப்புகளுக்கு நடுவே சுற்றி வந்தது. குடியிருப்பின் ஒரு பகுதியில் இருந்த மற்றொரு பகுதிக்கு பறந்து செல்ல முயன்ற போது அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி மயில் உடல் கருகி உயிரிழந்தது. இதை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

இதுகுறித்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்த சிலர் சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற சிங்காநல்லுார் போலீசார் மயில் தேசிய பறவை என்பதால், அதற்கு தேசிய கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மயிலின் சடலத்தை மதுக்கரை வனச்சரகரிடம் ஒப்படைத்தனர். வன அலுவலர்கள் மதுக்கரை வனப்பகுதியில் மயிலின் சடலத்தை அடக்கம் செய்தனர்.