இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்...அண்ணா பல்கலைக் கழகம்

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் பள்ளி, கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் பல மாநில அரசுகள் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுகள் உட்பட பள்ளித் தேர்வுகளை ரத்துசெய்து உத்தரவிட்டன.

இந்நிலையில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு தேர்வுகளையும் ரத்துசெய்யுமாறு பல மாநிலங்களில் கோரிக்கை எழுந்தது. ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகளை நடத்தாமல் முடிவுகளை அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்தராது என மறுத்துவிட்டது. அதையடுத்து வருகிற செப்டம்பர் இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை அனைத்துப் பல்கலைக் கழகங்களும் நடத்தி முடித்திட வேண்டும் என்ற சுற்றறிக்கையையும் வெளியிட்டு இருந்தது.

UGC யின் முடிவை எதிர்த்து பல மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தனர். அந்த மனுவில் கல்லூரி, பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.

மேலும் அந்தத் தீர்ப்பில் அனைத்து பல்கலைக் கழகங்களும் இறுதியாண்டு தேர்வினைக் கட்டாயம் நடத்த வேண்டும் எனவும் தேர்வுகளை ஒத்தி வைக்கலாம் ஆனால் தேர்வுகளை நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களுக்கு தேர்வுமுடிவினை அறிவிக்கக்கூடாது எனவும் கூறியிருக்கிறது.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்போது சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இதுகுறித்த தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் ஆன்லைன் மூலமா அல்லது நேரடியாக நடத்தப்படுமா என்பதைக் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறது.