தலைமை செயலகத்தில் தீ விபத்து; ஆவணங்களை அழிக்க முயற்சியா?

கேரள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் தங்கக்கடத்தல் ஆவணங்கள் அழிக்க முயற்சி நடந்ததாக கூறி எதிர்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

கேரள மாநிலத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 30 கிலோ தங்கக்கடத்தல் வழக்கு. இன்றும் அந்த பரபரப்பு குறையாமல்தான் உள்ளது. இந்த வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவை சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை பெங்களூரில் கைது செய்தது.

ஸ்வப்னா மற்றும் அவரது தரப்பினர்களை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும்அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் 150 கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்ததாகவும், இதற்கு பின்னணியில் பல பிரமுகர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கேரள தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அறையில் தான் தங்கக்கடத்தல் வழக்கு குறித்த ஆவணங்கள் உள்ளன என்பதும், அந்த ஆவணங்களை அழிக்க முயற்சியா? என்ற சந்தேகத்தையும் எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளனர்.

இந்த நிலையில் தங்கக்கடத்தல் ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாகக் கூறி தலைமைச் செயலகம் முன் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டம் செய்தனர். இதில் பாஜக கேரள தலைவர் சுரேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தீவிபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான நிலை உருவாகி உள்ளது.