மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சியை வழங்க அரசு நடவடிக்கை

நீட் தேர்வு பயிற்சி வழங்க ஏற்பாடு... மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்க அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று உள்ளது. தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தருவதாக கூறிய அ.தி.மு.க பிறகு பயிற்சி வழங்குவதாக கூறியது.


இந்த ஆண்டு பயிற்சி இன்னும் தொடங்கவே இல்லை. இதற்கு இடையே கொரோனா பாதிப்பும் வந்துவிட்டதால் இந்த ஆண்டும் தமிழக மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை என்பது கானல் நீராகிவிடும் என்ற கவலை எல்லோர் மத்தியிலும் உள்ளது. இதனால், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுத பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், அடுத்த மாதம் மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஒப்புதல் பெற்று,நீட் தேர்வில் ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க 10 கல்லூரிகளில் உணவு, தங்கும் வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் படித்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நீட் பயிற்சியை பொறுத்த வரையில் ஆசிரியப் பெருமக்களுக்கான பயிற்சிகள் 2000 ஆசிரியர்களுக்கு இரு வார காலங்கள் நடைபெற இருக்கிறது என்று கூறியுள்ளார்.