முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மரணம்

முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங், உடல்நலக்குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு 82 வயதாகிறது. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தவர். வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்.

வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய இழப்பு ஏற்று கொள்ளமுடியாதது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

அவரது மறைவிற்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளை வசித்தவர் ஜஸ்வந்த் சிங். தேசத்திற்காக விடா முயற்சியுடன் பணியாற்றியவர். அரசியலில் பாஜகவை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றிய தலைவர் என்று கூறினார்.

மேலும் அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.