தானேயில் வருகிற 19-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பைக்கு அடுத்தபடியாக தானே மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தானே மாநகராட்சி பகுதியில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 469 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், தானே நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2-ந் தேதி முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. அந்த பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வரும் நிலையில், தானேயில் வருகிற 19-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கணேஷ் தேஷ்முக் பிறப்பித்து உள்ளார்.