தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு; மாவட்டங்களுக்குள் பொது பேருந்து போக்குவரத்து ரத்து

தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 47,749 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் மார்ச் 25-ம் தேதி முதல் ஜூன் 31-ம் தேதி வரை 5 கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால் தமிழகத்தில் 6-வது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 31-ந்தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்ட பகுதிகளில் வரும் 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூலை மாதத்தில் வரும் 5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதுமட்டுமல்லாது மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்தும் 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.