திருத்திக் கொள்ளும் எண்ணமே சுகாதாரத்துறை அமைச்சருக்கு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: திருத்திக் கொள்ளும் எண்ணமே இல்லை... மருத்துவத்துறையில் பல பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ளும் எண்ணம் சுகாதார அமைச்சருக்கு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்படாததுடன், போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளில் என்ன காரணத்தினாலோ இதுவரை முறையாக தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் மூலம் மருந்துகளை கொள்முதல் செய்யாமல், உள்ளூர் கொள்முதல் மட்டுமே செய்வதாக தகவல் வெளியாவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஒன்றரை வயது குழந்தை கை இழந்தது, சளி தொல்லைக்கு நாய்க்கடி ஊசி செலுத்தியது உள்ளிட்ட சம்பவங்களையும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.