வேலூர் பாலாற்றில் கடும் வெள்ளபெருக்கு... கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை

நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கவுண்டய ஆறு, அகரம் ஆறு மற்றும் காட்டாறுகளில் இருந்து வரும் மழைநீர் பாலாற்றில் கலந்து வேலூர் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கலவகுண்டா அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பொன்னை ஆற்றில் பாய்ந்தது. மேலும் பொன்னை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யாரும் ஆறு, ஏரிகளில் குளிக்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கரையோர பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் அதை காண ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆபத்தை உணராமல் சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

தொடர்ந்து பாலாற்றின் கரையோர பகுதிகளை கண்காணிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் தலைமையில் வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.