திருநெல்வேலியில் இரண்டாவது நாளாக கனமழை; மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதி

இரண்டாவது நாளாகவும் கனமழை... திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் கனமழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மற்றும் மலையடிவார பகுதிகளில் சில நாள்களாக பெய்தது. திருநெல்வேலி மாநகரில் பருவமழை தாமதத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. பாளையங்கால்வாய் பாசன பகுதிகளில் கார் பருவ சாகுபடியும் பொய்த்துப் போனது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலையிலும் திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாநகரில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள கல்லூர், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூர், கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகவே நகர்ந்து சென்றன. திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், சிந்துபூந்துறை பகுதிகளில் முறையாக வடிகால் ஓடைகள் சீரமைக்கப்படாததால் மழைநீர் அதிகளவில் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து கழிவுநீர் ஓடைகளையும் விரைவாக சீரமைக்கவும், அடைப்புகளை நீக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.