வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. தற்போது மேலும் 4 நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். 15-ந் தேதி வரை மழையை எதிர்பார்க்கலாம். வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. இதனால் அடுத்து வரும் தினங்களில் நல்ல மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் சற்று மழை குறையும் என்று தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நிலையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாட்களில் மழை பெய்யக்கூடும் என்பதால் தீபாவளியை மழையோடு கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது.

இன்று சென்னை பகுதியில் பகலிலும் கனமழை பெய்தது. வானம் இருள் சூழ்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் மழையில் நனைந்தவாறு பயணம் செய்தனர். இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.