இடி மின்னலுடன் பலத்த மழை: தாஜ்மகால் வளாகத்தின் சில இடங்களில் சேதம்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உ.பி.யில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 43 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது. ஆக்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடும் சூறைக்காற்றும் வீசியது.

இதில் தாஜ்மகால் வளாகத்தில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. நுழைவாயில் கதவு மற்றும் பிரதான கல்லறையை ஒட்டியுள்ள சிவப்பு பளிங்கு கல்லால் ஆன தடுப்புச் சுவரின் ஒரு பகுதி, சுற்றுலா பயணிகள் நிற்கும் பகுதியில் உள்ள மேற்கூரை ஆகியவை சேதமடைந்துள்ளன. எனினும், பிரதான கட்டிடத்துக்கு எந்த சேதமும் இல்லை என்று தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் வசந்த் குமார் ஸ்வர்ன்கார் தெரிவித்துள்ளார். சேதமடைந்த பகுதிகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணமாக தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.